Saturday, February 12, 2011


எனது வேண்டுகோள்

பல ஆண்டுகளாக பாவலர் செம்பியன் அவர்களின் எண்ண ஓட்டத்தில தோன்றிய இந்த அணைக்கட்டு பற்றி ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னார்.  சொன்னவுடனேயே நாள் குறித்து நான்கு பேர் அந்த இடத்தைப் போய்ப் பார்த்தோம்.  “இயலும்” என்று தோன்றியது.  “கொளத்தூர் கொள்ளணை” என்ற கருத்துருவாக்கம் செய்து பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டோம்.  தமிழருக்கான ஓர் ஆக்கபூர்வமான திட்டம் இது.  இப்போது 11 பேர் போய்ப் பார்த்தோம், காடு மேடு சுற்றி அலைந்து கள ஆய்வு செய்தோம்.  குழுவில் பலர் அகவையில் மூத்தவர்கள்.  ஆனால், உள்ளத்தில இன்னும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று துடிக்கிறவர்கள்.  கு.ம.சுப்பிரமணியன் அவர்கள் பணி ஓய்வு பெற்றப் பொறியாளர், விசுவநாதன் அவர்களும் அப்படியே!  தமிழாலயன் இதய அறுவை சிகிச்சை பெற்ற கையோடு எங்களோடு அலைந்து திரிந்தார். பறம்பை அறிவன் பெரியவர்.  இப்படி அனைவருமே கள ஆய்வை முடித்தபோது மாலை ஐந்து மணி!  மதிய உணவு உட்கொள்ளவில்லை.  பின்னர் மேட்டூரில் சாலை ஓரக்கடையில் கிடைத்த ரொட்டியை வாங்கித் தின்றுவிட்டு கலைந்து சென்றோம்!
கொளத்தூர் கொள்ளணை பற்றிக் கேள்விப்பட்டவர்கள், வாசித்தவர்கள், அறிந்தவர்கள் பலர் இப்போது எனக்குத் தொடர்பு எடுக்கிறார்கள்.  கட்டப்படப்போவது நமது அணை!  நம் மக்களின் மகிழ்வுக்கும், வாழ்வுக்கும், வளம் பொங்கவும் கட்டப்பட வேண்டிய அணை!  ஆகவே, இந்த முயற்சியின் போது நமக்குள் இருக்கிற அரசியல் கருத்து முரண்பாடுகள் போன்ற சின்னச் சின்ன வேற்றுமைகளை அறவே களைந்து எறிந்துவிடுங்கள்.


1. யாருக்காகவும் காத்திராமல் எந்தெந்த விதங்களில் பரப்புரை செய்ய இயலுமோ செய்யுங்கள்.  
தமிழர் களத்தின் கலைக்குழுவிடம் இது பற்றிச் சொன்னேன்!  அவர்கள்  “கொளத்தூர் கொள்ளணை” என்ற வில்லுப்பாட்டை உருவாக்கி இரு இடங்களில் கோயில் திருவிழாவில் மேடையேற்றிவிட்டார்கள்.  நல்ல வரவேற்பு இருந்தது என்று சொன்னார்கள்.  
தொடக்கப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்புச் சிறார்கள் 15 நிமிடங்களுக்கு காவிரிச் சிக்கல் பற்றியும் தீர்வு கொள்ளணைதான் என்றும் கலைவடிவில் கொடுத்தார்கள்!  வியந்து மகிழ்ந்து அதிர்ந்து போனேன்!  
தம்பி தூரிகாவிடம் சொன்னேன், ஒரு குறுந்தகடு உருவாக்கிவிட்டான்.  
பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் பாட்டு ஒன்று உருவாக்கி விட்டாள்.  
பாவலர் செம்பியன் அவர்கள் பாடல்கள் எழுதிவருகிறார்.  
வீடு திரும்பிய ஐயா பறம்பை அறிவன் இன்னும் பலரோடு பேசியிருக்கிறார்.  “அவர்களையெல்லாம் இதில் இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.  
தஞ்சையிலிருந்து தொலைப்பேசி எடுத்து உரையாடிய திரு. ஆதி நெடுஞ்செழியன், புலவர் மாரிமுத்து ஆகியோர், “இயன்ற அனைத்தையும் செய்வோம் தரவுகளைத் தந்து கொண்டிருங்கள்” என்றார்கள். 
தஞ்சை வீரசிங்கம் பரப்புரை மேற்கொள்கிறார்!  
கடந்த ஆறாம் நாள் திருச்சியில் திரு. நெடுமாறன் தலைமையில் நடந்த தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் இதை முன்வைத்தபோது மிகுந்த ஆர்வமும் ஆதரவும் கிட்டியது.  ஏட்டாளர்கள் இதுபற்றி எழுதவேண்டும் என்று கேட்டார்கள்.  
பெரியவர் சங்கமித்திரா, திரு. வீ. ந. சோமசுந்தரம் என்று பலர் இதுபற்றி எழுதக்கேட்டார்கள்.  
வழக்கறிஞர் அலெக்ஸ் இதைப் பரப்பப் பெரும் முயற்சி எடுத்துவருகிறார்.  இப்படி இந்தக் குறுகிய நாட்களுக்குள் தொடர் முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
குறைந்தபட்சம் என்னிடம் நூறு பேராவது இதற்குள் தொடர்பு கொண்டிருப்பர்.  எனவே, எந்தெந்த வகையில் கொளத்தூர் கொள்ளணை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியுமோ அதைத் தயங்காமல், தாமதிக்காமல் உடனடியாக செய்யுங்கள்.
மனைவியோடு பேசுங்கள், மக்களோடு பேசுங்கள், கோயிலில் பேசுங்கள், பள்ளியில் பேசுங்கள், மேடையில பேசுங்கள், தேனீர் கடையில் பேசுங்கள், முடிதிருத்தும் கடையில் பேசுங்கள், இணையத்தில் பேசுங்கள்!  
இறுதியில்தான் சாந்தும் செங்கலும் வைத்து அணை கட்டுவார்கள்.  அதற்கு முன்பாக மக்களின் மனதில் கட்ட வேண்டியது நாம்தான்!  அது இப்போதே செய்ய வேண்டும்!
2. நமக்குள் பேசுவோம்!  தமிழர் நாம், கருத்து மோதலுக்காகப் பேசியிருக்கிறோம்!  நமது கொள்கைதான் சரி என்பதை மெய்ப்பிக்க பேசுகிறோம்!  என் கட்சியை, எனது வாதத்தை வளர்க்கப்  பேசுகிறோம்!  பேசி பல வேளை மோதுகிறோம்!  தவறேதும் இல்லை.  ஆனால், இப்படி ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் கரம் கோர்க்கலாமே! 


அன்புடன்
அரிமாவளவன்

Monday, January 24, 2011

பல்துறை வல்லுநர் பார்வையிடல்



கடந்த சனவரி 22ஆம் நாள் பொறியாளர் திரு. கு.ம. சுப்பிரமணியன், பாவலர் செம்பியன், வழக்கறிஞர் ம. பொன்னிறைவன், எழுத்தாளர் பறம்பை அறிவன், தேமதுரத் தமிழோசை ஆசிரியர் திரு. அறிவாலயன், பொறியாளர் விசுவநாதன், கல்வியாளர் திருத்துவம், பொறியாளர் பழனிச்சாமி, மின்துறைப் பணியாளர் அரசு, முன்னாள் உடற்கல்வி இயக்குநர் திரு. சானகிராமன், தமிழர்களப் பொதுச்செயலாளர் அரிமாவளவன் ஆகியோர் அடங்கிய குழு கொளத்தூர் கொள்ளணை அமையவிருக்கும் இடம் மற்றும் அதன் உத்தேச நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியனவற்றைக் கள ஆய்வு செய்தது.


பார்வையிட்டதன் அடிப்படையில் உருவான ஒருமித்தக் கருத்துக்கள்.


1. மேட்டூருக்கு முன்பாக தமிழக எல்லைக்குள் ஓர் அணை கட்டுவது கட்டாயம் இயலும்.  பாலாறும் காவிரியும் சேர்கிற சுண்டைக்காய் மலைப்பகுதியில் நாம் பரிந்துரைக்கிற அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி ஒக்கனேக்கல் வரை நீளக்கூடும்.


2. தமிழகத்திலுள்ள ஒரு வலுவான ஆட்சியாளரால் இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற இயலும்.


3. கொளத்தூர் கொள்ளணை பற்றிய தரவுகள், செய்திகள், அதற்கான தேவை ஆகியன மக்கள் நடுவில் எடுத்துச் செல்லப்பட்டு அதுவே ஓர் மக்கள் இயக்கமாக மாறிட வேண்டும்.  அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
பார்வையிட்ட இப் பல்துறை வல்லுனர் குழுவே கொளத்தூர் கொள்ளணை மக்கள் இயக்கப் பொறுப்பாளர்களாக ஒரு மனதாக நியமிக்கப்பட்டனர்.


தலைவர் திரு. அரிமாவளவன்
துணைத் தலைவர்கள்: திரு. கு.ம. சுப்பிரமணியன் மற்றும் திரு. ம. பொன்னிறைவன்
செயலாளர்: திரு. செம்பியன்
பொருளாளர்: திரு. விசுவநாதன்
உறுப்பினர்கள்
திரு. பறம்பை அறிவன்
திரு. சோ. பழனிச்சாமி
திரு. தமிழாலயன்,
திரு. சானகிராமன்
திரு. திருத்துவம்
திரு. அரசு


உடனடிச் செயற்பாடுகளும் அதன் பொறுப்பாளர்களும்


1. நுட்ப அறிக்கை ஒன்றை அணியப்படுத்துவது!
பொறுப்பாளர்கள் திரு. கு.ம. சுப்பிரமணியன், திரு. சோ. பழனிச்சாமி (தேவைப்படின் இன்னும் பிற துறைசார் வல்லுனர்கள்)
அறிக்கை தர வேண்டிய காலக்கெடு: பிப்ரவரி 5ஆம் நாளுக்குள்


2. ஊடகங்கள் வழி பரப்புரை செய்தல்
பொறுப்பாளர்: திரு. அரிமாவளவன்


3. பழ நெடுமாறன் அவர்களைச் சந்தித்து இது குறித்து விளக்குவது
பொறுப்பாளர்: திரு. ம. பொன்னிறைவன்


4. அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது


அரிமாவளவன்